உலகெங்கும் தாய்மொழியின் அவசியத்தைத் தெரிந்துகொண்ட அளவுக்குத் தமிழர்களால் அதன் முக்கியத்துவம் உணரப்படாமல் போனதற்குக் காரணம் என்ன?
ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று நாமும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்;; ஆனால் உண்மை நிலை என்ன?
ஆங்கிலேயர் அகன்றுவிட்டபோதிலும் அவர்களது மொழியும், பண்பாடும் இப்போதும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது; இதிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?
நமக்கு " "அரசியல் விடுதலை" " மட்டுமன்றி சமுதாய, பொருளாதார, பண்பாட்டு விடுதலைகள் கிடைக்க வேண்டும். உலகில் எத்தனை ஆதிக்கங்கள் உண்டோ அத்தனைக்கும் நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். நாம் அடிமைகளாக இருக்கிறோம் என்பதைத் தெரியப்படுத்தி, புரிய வைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்த நிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. மொழி இல்லையேல் இனமில்லை; நாடும் இல்லை; இதற்கான வரலாறும் இல்லையன்றோ?
உலகத்திலுள்ள கல்வியாளர்களும், சமூக ஆய்வாளர்களும், உளவியல் வல்லுநர்களும் தாய்மொழிக் கல்வியையே ஆதரிக்கின்றனர். அதுதான் இயற்கையானது; அதனை விட்டு வேறு மொழியில் கற்பது செயற்கையானது; இது காலால் நடப்பதற்குப் பதிலாகக் கைகளால் நடப்பது போன்றதாகும்.
"குழந்தை தன் முதல் பாடத்தைப் படிப்பது தாயிடமிருந்துதானே! ஆகவே குழந்தைகளின் மனவளர்ச்சிக்குத் தாய்மொழியையல்லாது வேறொரு மொழியை அவர்கள் மேல் சுமத்துவது நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நான் கருதுகிறேன்..." "" " என்றார் காந்தியடிகள்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகள் எல்லாம் தாய்மொழி மூலம் கல்வியறிவை வளர்த்துக் கொண்டவையே! அமெரிக்காவின் அணுகுண்டால் பெரும் பாதிப்புக்குள்ளான ஜப்பான், அதிக மக்கள்தொகையால் திணறிக் கொண்டிருந்த சீனா, போராலும், புரட்சியாலும் பாதிக்கப்பட்ட ரஷியா என்னும் இந்த நாடுகள் இன்று சாதனைக்கு மேல் சாதனைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. அரசியலிலும், அறிவியலிலும் மேலைநாடுகளோடு போட்டியிடுகின்றன. இவைதவிர மேலைநாடுகளில் பிரான்சும் ஜெர்மனியும் தாய்மொழியையே பராமரிக்கின்றன.
கிரேக்க, ரோமநாட்டு அறிஞர்களிடமிருந்தும் ஜெர்மன் விஞ்ஞானிகளிடமிருந்தும் ஆங்கிலேயர் அறிந்து கொண்ட செய்திகள் பல. அவற்றையெல்லாம் அவர்கள் தங்கள் தாய்மொழியின் வாயிலாகவே கற்றுத் தெளிவடைந்தனர்; அதனால் அவர்களும் உயர்வடைந்தனர்; அவர்களது மொழியும் வளம் பெற்றது.
13-ம் லூயி என்ற பிரெஞ்சுப் பேரரசன் தன் மொழியைப் பேணி வளர்ப்பதற்காக 1525-ம் ஆண்டு பிரெஞ்சுக் கலைக் கழகத்தை உருவாக்கினார். ஆனால் வளமாக வாழ்ந்த பண்டையத் தமிழ்மக்கள் தம்மொழியை வளர்ப்பதற்காக 2000 ஆண்டுகளுக்கு முன்பே பல சங்கங்களை நிறுவியுள்ளனர்.
முடியுடை மூவேந்தர்களில் பாண்டியர்கள் தங்கள் தலைநகரங்களில் மூன்று சங்கங்களை நிறுவி தமிழ் வளர்த்ததை வரலாறு கூறுகிறது. இதுபற்றிய குறிப்புகளை "இறையனார் களவியல்" " நூலுக்கு நக்கீரர் எழுதிய உரை மூலம் அறியலாம்.
"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே" " என்றும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்" " என்றும் பாரதி பாடிய பெருமைமிக்கது நம் தாய்மொழியே!
தமிழ்மொழி பழமையிலும், சொல்வளத்திலும், இலக்கணச் செழுமையிலும், செய்யுள் ஆளுமையிலும், பண்பாட்டுச் சிறப்பிலும் தலைசிறந்தது என்பது மொழிநூலார் கூற்றாகும். உலகத்தின் உயர்தனிச் செம்மொழிகளான கிரேக்கம், எபிரேயம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாக ரைஸ் டேவிட்ஸ் கூறியுள்ளார்.
உலக நாகரிகத்தின் அளவுகோலாக மதிக்கப்படுவது மொழியாகும்; மிகப் பழைய நாகரிகமாகக் கூறப்படுவது சுமேரிய நாகரிகம். அதன் அடையாளமான சுமேரிய மொழி சொல்வளம் மிக்கது; ஆயினும் தமிழை நோக்க அம்மொழி இளமையான பிற்பட்ட மொழியாகவே கருதப்படும் என்றார் அறிஞர் எஸ். ஞானப்பிரகாசர்.
வட இந்தியாவில் வாழ்ந்த மொகஞ்சதாரோ மக்கள் திராவிட மொழியையே பேசினர் என்றும் அவர்கள் பேசிய சொற்களில் பலவற்றைத் தமிழில் காணலாம் என்றும் ஆதலின் இப்போது வழங்கும் எல்லா மொழிகளிலும் தமிழே மிகப் பழமையானது என்றும் ஹீராஸ் பாதிரியார் குறிப்பிடுகிறார்.
இத்தனை சிறப்புகள் இருந்தாலும் இன்று இதன் நிலை என்ன? "உலகெங்கும் தமிழ், எதிலும் தமிழ்" " என்று அலங்காரமாகப் பேசப்படுகிறதே தவிர, "எங்கே தமிழ்?" " என்று கேட்கும் நிலையே. அன்றும் இன்றும் இதில் மாற்றமில்லை.
2003 யுனெஸ்கோ அறிக்கையின்படி இன்று உலகில் பேசப்படும் மொழிகள் சுமார் 6700 என்றும் இவற்றில் பாதிக்கும் மேல் 2100-ம் ஆண்டுக்குள் அழிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிக்கையில் ஒரு மொழியின் அழிவுக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படும் 9 காரணிகளும் நமது தாய்மொழிக்கும் பொருந்துவதாக அமைந்திருப்பதுதான் மிகவும் வேதனையானது.
1952-ம் ஆண்டு. வங்க தேசம் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த காலம். அங்குள்ள மக்களின் தாய்மொழி வங்காளம். பாகிஸ்தான் அரசு வங்காள மொழியை நீக்கிவிட்டு, உருது மொழியைத் திணிக்க முயன்றபோது மொழிப்போர் வெடித்தது.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் அரசின் அடக்குமுறையை மீறி மாணவர்கள் கூட்டம் நடத்தினர். காவல்துறை கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் நான்கு மாணவர்கள் உயிர் இழந்தனர்; நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
இந்த மொழிப்போரில் உயிர்நீத்த இளைஞர்களின் நினைவாகவே பெப் 21ம் திகதியை "உலகத் தாய்மொழி நாள்" " என்று 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது.
"ஒரு மொழி மக்களின் தொடர்பு இழந்து விடுமானால் அது உயிருள்ள, வலுவுள்ள, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பொருளாக இருப்பதைவிடுத்து, தன் வீரியத்தையிழந்து உயிரற்ற செயற்கைப் பொருளாகிவிடும்..." "" " என்று நேரு கூறுகிறார்.
1961-ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 1652 தாய்மொழிகள் இருந்தன. இதில் 14 மொழிகளை தேசிய மொழிகளென அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்டது. இதில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியதாகும்.
தமிழை ஆட்சிமொழியாக ஆக்க வேண்டும் என்று கோரும் நாம் தமிழின் நிலை என்ன என்று சிந்திக்க வேண்டாமா?
வாயளவில் இல்லாமல் செயல் அளவில் செய்ய வேண்டியதே தாய்மொழிக்கு நாம் செய்ய வேண்டிய கடமையாகும். தாய்மொழியை மறந்த தமிழ் மக்களை தாயே மன்னித்தாலும் தலைமுறை மன்னிக்காது.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








